Friday, March 28, 2014

இணையத்தின் மூலம் பணம் - உண்மையா?

”வீட்டில் தினமும் 2 மணி நேரம் செலவிட்டு மாதம் பத்தாயிரம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு!” பத்திரிக்கைகளில், அங்கங்கே சுவரொட்டிகளில் இது போன்ற விளம்பரத்தை பார்த்து யாராவது அதற்கு கால் செய்திருக்கிறீர்களா? நான் செய்திருக்கிறேன்! சுமார் பத்து வருடம் முன்பு.”தினமும் 2 மணி நேரம் ப்ரவுசிங்க் செண்டரில் இருந்து மாதம் 6 ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை சம்பாதிக்கலாம்” என்ற ஒரு விளம்பரம் திருச்சி தினமலரில் வந்திருந்தது!

நான் அப்போது தான் 12வது முடித்திருந்தேன்.கல்லூரி சேருவதற்கு இடைப்பட்ட மூன்று மாதம் இருந்தது. ”சும்மா இருக்கறதுக்கு உருப்படியா எதாவது செய்யலாம்” என்று யோசித்து தான் அந்த விளம்பரத்திற்கு கால் செய்தேன். “நேர்ல வாங்க சார். உக்காந்து பேசுவோம்” என்றார். நான் போனபோது எனக்கு முன்பே பத்து பேர் காத்திருந்தார்கள்.”தினமலர் வெளம்பரமா?” என்றார்கள்! எனக்கு கொஞ்சம் பயம் தான். “ஏமாத்திடுவாய்ங்களோ”

ஆனாலும் எனக்கு கம்பெனிக்கு பத்து பேர் இருந்தது கொஞ்சம் தெம்பாக இருந்தது.உள்ளே கூப்பிட்டார்கள்.”கம்ப்யூட்டர் யூஸ் பண்ண தெரியுமா?” என்றார்கள். “மெயில் ஐடி வச்சிருகீங்களா” என்றார் ஒருவர். “அப்றம் என்ன சார். நான்லாம் மாசம் முப்பதாயிரம் சம்பாதிக்கறேன். சந்தேகம்னா பாருங்க” என்று எதோ ஒரு தளத்துக்குள் லாகின் செய்து காட்டினார்.528டாலர் காட்டியது. ”இது 20 தேதிக்குள்ள சம்பாதிச்சது.” என்றார்!

அதற்கு பிறகு அவர் பேசிய எதுவுமே கேட்கவில்லை. என் காதுக்குள் “வெற்றிகொடிகட்டு” பாட்டு கேட்டது. சூர்யவம்சம் சரத்குமார் போல நான் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தபோது எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தார்கள்! (கொஞ்சம் ஓவராத்தான் போய்கிட்டு இருக்கோமோ)
”950ரூபாய் கட்டினீங்கன்னா உங்களுக்கு ட்ரெயினிங்க் குடுப்போம்.” என்றார்! நானும் சேர்த்துவைத்திருந்த அஞ்சு பத்தையெல்லாம் எடுத்துகொண்டு போய் அடுத்த வாரமே அவர்களிடம் கட்டி உறுப்பினராய் சேர்ந்துகொண்டேன்.


அவர்கள் சொல்லித்தந்தது இது தான்.கூகிள்  நிறுவனம் ஆட்சன்ஸ் என்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள்.கூகிள் தளத்திற்கு வரும் விளம்பரத்தை உங்களுக்கு தருவார்கள். நீங்கள் அதை உங்கள் வெப்சைட்டில் வைத்துக்கொண்டால், அந்த விளம்பரத்தை யாராவது க்ளிக்கினால் அவர்கள் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை உங்களுக்கு தருவார்கள்.
உதாரணமாக அவர்கள் ஒரு டாலர் சம்பாதித்தால் உங்களுக்கு 0.10 டாலர் கிடைக்கும். பத்து க்ளிக் விழுந்தால் ஒரு டாலர். நூறுவிழுந்தால்.. ஆயிரம் விழுந்தால்.. வெப்சைட் மற்றும் கூகிள் ஆட்சன்ஸ் கணக்கு துவங்க தான் என்னிடமிருந்து 950ரூபாய் வாங்கினார்கள்.ஆனால் இதில் சில நிபந்தனைகள் இருக்கின்றன.

எக்காரணம் முன்னிட்டும் உங்கள் தளத்தில் இருக்கும் விளம்பரத்தை நீங்கள் க்ளிக் செய்யக்கூடாது!உங்கள் நண்பர்கள் யாரிடமும் சொல்லி க்ளிக் செய்யச்சொல்லக்கூடாது. இப்படி நிறைய இருக்கிறது.  நானும் என்னென்னவோ செய்து இரண்டு மாதம் கஷ்டபட்டு 10டாலர் சம்பாதித்தேன். கொடுமை என்னவென்றால் இணையத்திற்காக ப்ரவுசிங்க் செண்டரில் நான் செலவு செய்ததே 2ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். திடீரென ஒரு நாள் கூகிள் என் கணக்கை முடக்கிவிட்டார்கள். பத்து டாலரும் போச்சு.

அந்த நிறுவனத்திடம் கேட்டால் “ நாங்க சொன்ன மாதிரி பண்ணீருக்க மாட்டீங்க. தப்பா பண்ணீருப்பீங்க” என என் மேலேயே பழி போட்டு கொஞ்சம் மொக்கை போட்டு, வேணும்னா புதுசா அகவுண்ட் ஓபன் பண்ணி தரவா.இந்த தடவை ஆறு நூறு ரூபாய் கட்டினா போதும்” என்றார்கள். போங்கடா நீங்களும் உங்க பணமும் என திட்டிவிட்டு வந்துட்டேன்! இது போல  நாம் கேள்விப்படாத நிறைய கதைகள் இருக்கின்றன. உண்மையிலேயே இண்டர்நெட் பணம் என்பது மோசடியா? அடுத்த வாரம் வரை காத்திருங்கள்!

இணையம் மூலம் பணம் உண்மையா - இரண்டாம் பாகம்

இணையம் மூலம் பணம் உண்மையா - மூன்றாம் பாகம்

No comments: